""இந்தத் தொழிலில் நாங்கள் போடுகிற மூலதனத்துக்கும், உழைக்கிற உழைப்புக்கும், படுகிற பாட்டுக்கும் பதிலாக வேறோரு தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும்.'' இப்படிச் சொல்கிறவர் யார் ? ஏ.வி.எம். ஸ்டுடியோ அதிபர் திரு.மெய்யப்பச் செட்டியார் அவர்கள்தான். ""அப்படியானால் இந்தத் தொழிலை விட்டு விடுவதுதானே ?'' என்று கேட்டால் எப்படி விட முடியும் ? புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாலை விட்டால் திரும்பி நம் மீது பாய்ந்து விடுமோ என்று அஞ்சி,கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதில்லையா ? அந்த மாதிரிதான் ''என்கிறார். திரு மெய்யப்பன் இத்தொழிலை விரும்பி மேற்கொண்டார் என்பதைக் காட்டிலும், சந்தர்ப்பம் இவரை இழுத்துக்கொண்டது என்று கூறுவதுதான் பொருந்தும். இவருடைய தந்தை "" ஆவிச்சி'' செட்டியார் காரைக்குடியில் ஒரு ஸ்டோர் வைத்திருந்தார். கிராம போன் ரிக்கார்டுகள் விற்பனை செய்யும் டீலராகவும் இருந்தார். அவர் தொடங்கிய அந்த ஸ்டோர் ""ஏவி. அண்ட் சன்ஸ்'' என்ற பெயரில் இப்போதும் நடந்து வருகிறது.இதே வியாபாரத்தை விரிவாகச் செய்யும் நோக்குடன் 1932-ல் சென்னைக்கு வந்திருந்த திரு.ஏ.வி.எம்., நாராயண அய்யங்கார், சிவன் செட்டியார் இவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு, "" சரஸ்வதி ஸ்டோர்'' ஸைத் தொடங்கினார். ரேடியோவும் சினிமாவும் வந்த பிறகு கிராமபோன் ரிக்கார்டுகளுக்கு மவுசு குறைந்து விட்டதால், மெய்யப்பனின் கவனம் படத் தயாரிப்புத் தொழிலில் திரும்பியது."" சரஸ்வதி டாக்கி புரொடியூஸிங்'' என்ற பெயரில் ஒரு படக் கம்பெனியைத் துவக்கினார். அப்போதெல்லாம் சென்னையில் ஸ்டூடியோக்கள் கிடையாதததால், கல்கத்தா நியூ தியேட்டர்ஸூக்குச் சென்று ""அல்லி அர்ஜூனா'' என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்தார். கே.எஸ். அனந்த நாராயணய்யர் அந்தப் படத்தில் கிருஷ்ணனாகவும், குறத்தியாகவும் நடித்தார். "" படம் எப்படி இருந்தது ?'' என்று கேட்டதற்கு "" அதை ஏன் கேட்கிறீர்கள் ? படம் முழுவதும் எடுத்து விட்டோம். அப்போதெல்லாம் உடனுக்குடன் ""ரஷ்'' பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. மொத்தமாகப் படத்தைப் போட்டு பார்த்தபோது 10,500 அடி கூடத் தேறவில்லை. படத்தில் எல்லோருடைய கண்களும் மூடிக் கிடந்தன. வெயிலில் படம் எடுத்ததால் கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டு விட்டார்கள். எடுக்கிறவர்களுக்கும் வெயில்தானே ? நடிக்கிறவர்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்களா, திறந்து கொண்டிருக்கிறார்களா என்று பார்க்க முடியவில்லை. அப்புறம் கார்ட்டூன் படங்களை சேர்த்துக் காண்பித்து நேரத்தைச் சரி கட்டினோம் ?'' என்றார். ""அல்லி அர்ஜூனாவுக்கு'' பிறகு இவர் எடுத்த படம் ""ரத்னாவளி''. நடித்தவர்கள் ரத்னாபாய்-சரஸ்வதி பாய் சகோதரிகள். இந்தச் சகோதரிகளுக்கு 30 நாள் ஷூட்டிங்க்கு 25,500 ரூபாய் கொடுக்கப்பட்டது. ""வசூல் எப்படி ?'' என்ற நமது கேள்விக்கு, ""பிரயோஜனமில்லை'' என்பதுதான் அவர் பதில். "" இனி சொந்தத்தில் ஸ்டூடியோ இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. ஸ்டூடியோ ஆரம்பிப்பதாயிருந்தால் அது பங்களூரில்தான் இருக்கவேண்டும், அதுக்கேற்ற சீதோஷ்ண நிலை அங்கேதான் இருக்கிறது'' என்ற முடிவுக்கு வந்தார். பங்களூரில் ""ப்ரகதி'' என்ற பெயரில் ஒரு ஸ்டூடியோவைத் தொடங்க முடிவு செய்தார் ஏ.வி.எம். வெளிநாட்டிலிருந்து சாதனங்கள் வந்துசேர ஆறு மாத காலம் என்பதால் பூனா சென்று இந்தி நந்தக் குமாரைத் தமிழில் எடுக்க முயன்றார்கள். அப்படம் குறைந்த வசூலைத் தரவே தமிழில் நந்தகுமார் எடுத்தார்கள். அதில் பணம் கிடைத்தது. ஆனால், பங்களூர் பார்ட்னர்கள் தங்கள் பங்கைப் பிரித்து விட்டதால், ஏ.வி.எம். பிரகதி ஸ்டூடியோவை பங்களூரில் அமைப்பதற்குப் பதில் சென்னையில் நிறுவ வேண்டியதாயிற்று. ஒஷியானிக் ஓட்டலுக்கு அருகேயுள்ள விஜயநகரம் பேலஸ்தான் பிரகதி ஸ்டூடியோ இருந்த இடம். வாடகை ரூ.350-தான். பூகைலாஸ், அரிச்சந்திரா, சபாபதி, ஸ்ரீவள்ளி ஆகிய படங்களே ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டவை. "" சபாபதி ரொம்பத் தமாஷான படம்''என்று நாம் சொன்னபோது ""பூ கைலாஸ் எடுத்தது அதை விட வேடிக்கை''என்றார். "" தெலுங்கு பேசும் படம், தமிழ் புரொடியூஸர், இந்தி டைரக்டர், கன்னட ஆர்ட்டிஸ்ட்ஸ் ! இதுதான் பூகைலாஸ் !'' 1944-ல் ஏ.வி.எம் டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட ""ராஜயோகி'' பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. வசுந்தராவும், தியாகராஜ பாகவதரும் சேர்ந்து நடித்த முதல்-கடைசி படம் அதுதான்.பாதியில் நின்று போனதற்குக் காரணம், நட்சத்திரங்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான். 1947-ல் உலக யுத்தம் வந்து விடவே, மின்சார வசதி இல்லாமல், ஸ்டூடியோவை காரைக்குடிக்குக் கொண்டுபோக நேர்ந்தது. இடம் மாறிய போது ஸ்டூடியோவின் பெயரும் ஏ.வி.எம். என்று மாற்றப்பட்டது. தேவகோட்டை ரோடில் ஒரு இடத்தைப் பிடித்து ஐம்பது குடிசைகள் போட்டு, நட்சத்திரங்களை அங்கேயே குடியேற்றி, ""நாம் இருவர்'', ""வேதாள உலகம்' போன்ற படங்களை உருவாக்கினார். பாரதியார் பாடல்களுடன் வெளியான படம் "" நாம் இருவர்''. லலிதா-பத்மினி பாம்பாட்டி நடனத்துடன் வெளியானது வேதாள உலகம். ரூ.25,000 கொடுத்து பாரதியார் பாடல்களை விலைக்கு வாங்கி வைத்திருந்த உரிமையை, அப்போதைய முதல்வர் திரு.ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் விருப்பத்திற்கேற்ப பொதுச்சொத்தாக மாற்றி சர்க்காரிடம் ஒப்படைத்தார் ஏ.வி.எம். ஏ.வி.எம். ஸ்டூடியோ கோடம்பாக்கத்துக்குக் குடியேறியது 1948-ல். ""பராசக்தி'', ""வாழ்க்கை'',""அந்த நாள்'' போன்ற படங்கள் உருவானது இங்கேதான். ""இந்திப் படம் எடுத்தது எப்போது ?'' என்று கேட்டதற்கு,""திரு.வாசன் அவர்கள் இந்தியில் ""சந்திரலேகா'' எடுத்து, வடநாட்டில் வெற்றிகரமாக ஓட்டிக் காட்டிய பிறகுதான், இந்தி மார்க்கெட்டில் நாங்களும் தைரியமாகப் புகுந்தோம்'' என்கிறார் ஏ.வி.எம். ஏ.வி.எம். முத்திரையில் எடுக்கப்பட்ட ""ஹம் பஞ்சி ஏக் டால்கே என்னும், குழந்தைகள் நடித்த இந்திப் படத்துக்குப் பிரதம மந்திரி ""அவார்ட்''கிடைத்தது மட்டுமல்ல ; அந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்த நேருஜி ஏ.வி.எம். அவர்களையும், அந்தக் குழந்தைகளையும் தம் வீட்டுக்கு அழைத்து விருந்தோபச்சாரமும் செய்தார். ஐந்து முறை ஜப்பான் சென்று வந்துள்ளஏ.வி.எம்., ""அந்த நாட்டுக்கு இணையான இன்னொரு நாட்டைப் பார்த்ததில்லை. நேர்மையும், நாணயமும், உபகார குணமும் அந்த நாட்டின் தனிச்சிறப்பு'' என்கிறார். ஆவிச்சி உயர்நிலைப்பள்ளி, ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் - இவ்விரண்டும் திரு.மெய்யப்பனின் தர்ம ஸ்தாபனங்கள். இவர் புதிதாகத் தொடங்கியுள்ளது, படங்கள் எடுப்பதற்குத் தேவையான பிலிம் வியாபாரம். பெயர் : ""ஆர்வோ.'' |
Tuesday, June 30, 2009
ஏ.வி.எம். ! ஒரு தமிழ் சினிமாவின் அடையாளம்
Labels:
cinema
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment